வலிகாமம் தெற்கு பிரதேச சபை

வலிகாமம் தெற்கு பிரதேச சபை பற்றிய ஒரு அறிமுகம்
வலிகாமம் தெற்கு பிரதேச சபையானது 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இலங்கையின் வடக்கு மாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளுராட்சி அமைப்புக்களுள் ஒன்றாகும். வலிகாமம் தெற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இப்பிரதேச சபையின் மொத்த விஸ்தீரணம் 30.01 சதுர கிலோ மீற்றர்கள்; ஆகும்.
453/14ஆம் இலக்க 12.05.1987ம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய
இதன் வடக்கில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையும்
கிழக்கில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையும்
தெற்கில் நல்லூர் பிரதேச சபையும்
மேற்கில் வலி.தென்மேற்கு பிரதேச சபையும் எல்லைகளாக உள்ளன.
வலிகாமம் தெற்கு பிரதேச சபைப் பகுதியானது 18 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் J/182 தொடக்கம் J/211 வரையான ; 30 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாகும். இப் பிரதேச சபையில் தவிசாளர் உட்பட 30 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாக மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுகின்றார்கள்.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையானது சுகாதாரம், வீதிப்புனரமைப்பும் பராமரிப்பும், குடிநீர் வசதி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு,சந்தை வசதி, கல்வி, நூலகம் மற்றும் ஏனைய அபிவிருத்திப் பணிகளிலும் மக்கள் சுக வாழ்விற்கு வேண்டிய பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. சுன்னாகம், ஏழாலை, உடுவில் ஆகிய மூன்று உப அலுவலகப் பிரிவுகளினூடாகத் தனது செயற்பாடுகளைத் திறம்பட ஆற்றிவருகின்றது.
இலங்கை மின்சார சபை, விவசாயத் திணைக்களம், கமநல சேவைத் திணைக்களம், வங்கிகள், கல்வி வலயம், பொலிஸ் நிலையம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் தபாற்கந்தோர் ஆகியன இப்பிரதேசத்தின் அபிவிருத்தியில் பங்கு கொள்கின்றன.
இப்பிரதேச சபையின் மருதனார்மடம், சுன்னாகம் பொதுச்சந்தைகளானது யாழ் மாவட்டத்தின் முதற்தர சந்தைகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான ஒரு முக்கிய மையமாகவும் சிறந்த போக்குவரத்து வசதிகளைக் கொண்ட அதாவது புகையிரத நிலையம் மற்றும் பஸ்தரிப்பு நிலையம் என்பவற்றின் மத்தியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்பிரதேசத்தில் இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் உலகப் பெருமஞ்சத்தைக் கொண்ட இணுவில் கந்தசாமி ஆலயம், மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயம், சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயம், கந்தரோடை தொல்பொருள் மையம் மற்றும் சுன்னாகம் பொதுச்சந்தையிலுள்ள 200 வருட பழமை வாய்ந்த டச்சுக் கட்டடம் என்பன இப்பிரதேசத்தினை மேலும் அழகுபடுத்துவதாக உள்ளன