யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மிகப் பழைய குடிருப்புப் பகுதிகளில் இது முக்கியமானது. இது இலங்கையிலேயே நகராக்கம் இடம்பெற்ற மிகப் பழைய இடங்களில் ஒன்றாகவும் சொல்லப்படுகின்றது[1]. தற்போது இது சிறிய ஊராக இருப்பினும் பழைய காலத்தில் யாழ்ப்பாணப் பகுதியின் தலைமையிடமாக இருந்ததாகக் கருதப்படுகிறது.[2] அக்காலத்தில் கதிரமலை என அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இவ்வூரில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகள் மூலம் பல பண்டைய கால சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கந்தரோடைக் குடியேற்றம் புத்தசமயக் காலத்துக்கும் முற்பட்டது என்பதையும் பெருங்கற்காலப் பண்பாட்டுக்கு உரிய சான்றுகள் இங்கு காணப்படுவதையும் ஆய்வுகள் காட்டுவதுடன், இப்பகுதியில் அகழ்வாய்வுகளில் கிடைத்த பொருள்கள் சில கிமு இரண்டாவது ஆயிரவாண்டைச் சேர்ந்தவை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.[1],